Sunday, January 24, 2010

aayirathil oruvan tamil review

செல்வராகவன் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களை வரிசைப்படுத்தினால் நிச்சயம் அவருக்கு இடமுண்டு. துள்ளவதோ இளமை பாடல்களைக் கேட்டு விட்டு அதை டிவியில் பார்த்த போது எரிச்சலாக இருந்தது இவனெல்லாம் ஒரு ஹீரோ என சலிப்பு வேறு. அந்தக் கடுப்பில் படமே பார்க்கவில்லை. 2003 ஆம் வருடம் அதே ஹீரோ நடித்து ஒரு படம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. நண்பர்களின் வற்புறுத்தலுக்காக அந்தப் படத்தைப் போய் பார்த்தேன் பார்த்த நாளில் இருந்து தனுஷ் என் விருப்பத்துக்குரிய நடிகர்களில் ஒருவராகி விட்டார். இவனைப் பிடிக்காது என்ற முன் முடிவுடன் படம் பார்க்கச் சென்றவனைஅவரது ரசிகனாக்கிய திறமைக்கு சொந்தக்காரர் செல்வராகவனே. இதோ கிட்டத் தட்ட மூன்று வருடங்களாக இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என போக்குக் காட்டிய செல்வராகவனின் புதியப் படைப்பு ஆயிரத்தில் ஒருவன். நிச்சயமாக தமிழிலே இது ஒரு புதிய முயற்சி. செல்வராகவன் படங்களில் என்னவெல்லாம் நாம் எதிர்ப்பார்ப்போமோ, என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் இருக்கிறது ஆனால் முற்றிலும் புதிய களத்தில். கிபி 13 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது கதை. சோழ பாண்டிய மன்னரிடையே ஏற்படும் போர் உக்கிரமடைய சோழ இளவரசன் பெரும் படை புடைசூழ குறித்த சிலரோடு பெயரறியா தீவொன்றைச் சென்றடைகிறான். அவனைப் பின்தொடரும் ஒரு பாண்டிய நாட்டவனின் குறிப்புக்கள் அடங்கிய ஓலைச் சுவடிகளின் ஆதாரத்தோடு அந்த சோழன் தஞ்சமடைந்த இடத்தை கண்டறிய முயலும் ஒரு தொல்பொருள் ஆய்வுக் குழுவின் முயற்சியே ஆயிரத்தில் ஒருவன். தொல்பொருள் ஆய்வுக்குழுவின் தலைவி ரீமா சென், ஏலவே இப்பணியில் ஈடுப்பட்ட தன தந்தையைப் பறிக்கொடுத்த அண்ட்ரியா, இராணுவ உதவி வழங்கும் அழகம் பெருமாள் இவர்களோடு தன குழுவினருடன் பயணத்தில் இணைந்துக் கொள்ளும் போர்ட்டர் கார்த்தி. இவர்களே பிரதானப் பாத்திரங்கள். கார்த்தி நன்றாக நடித்திருக்கிறார். என்ன இன்னமும் பருத்தி வீரன் தாக்கம் இவரை விட்டுப் போகவில்லை என நினைக்கிறேன். கொஞ்சம் ஸ்டைலை மாற்றுங்கள் கார்த்தி. செல்வராகவன் படங்களில் வழமையாக கதாநாயகி சோகம் ததும்ப வலம் வருவார். இதிலே அண்ட்ரியா அந்த வேலையைக் கச்சிதமாக செய்கிறார். அழகம் பெருமாள் வழமைப் போலவே சிறப்பாகச் செய்திருக்கிறார். பார்த்திபன் சஸ்பென்சில் வைக்கப்பட்டிருந்த பாத்திரம் படம் வெளிவரும் வரை ஸ்டில் ஒன்று கூட வெளியிடப்படவில்லை. நானும் சஸ்பென்சை உடைக்க விரும்பவில்லை ஆடியோ ரிலீசில் பார்த்திபன் பேசிய அதே வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் பார்த்திபன். அடுத்தது ரீமா சென் பார்க்க அத்தனை அழகாய் இருக்க மாட்டார். முதிர்ச்சி தட்டிய முகம். ஒரு ஆண் போன்ற பாவனைகள் இவரா கிடைத்தார் செல்வராகவனுக்கு என நானும் யோசித்தேன். இதற்கெல்லாம் தன நடிப்பால் பதில் சொல்லியிருக்கிறார் ரீமா. முதல் படத்திலேயே தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப் பட்ட கார்த்தி, 25 வருடத்திற்கு மேலே நடிப்பனுபவம் கொண்ட பார்த்திபன் எல்லாமே இவர் நடிப்புக்கு முன்னாள் ஒன்றுமே இல்லை என்னுமளவுக்கு அசத்துகிறார் ரீமா சென். ரீமா தவிர்ந்து இன்னுமொருவரை அந்தப் பாத்திரத்தில் நினைத்தும் பார்க்க முடியவில்லை. விடுங்கள் விட்டால் ரீமா சென்னுக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவேன். உண்மையை சொன்னால் சிம்ரனுக்கு பிறகு எந்தப் பாத்திரம் என்றாலும் செய்யக் கூடியவர் இவராயத்தான் இருக்கும். இசை ஜி.வி.பிரகாஷ் பாடல்கள் ஏலவே ஹிட் ஆயிற்றே. பின்னணி இசையிலும் பெரிதாக குறை வைக்கவில்லை. பார்த்திபனும் ரீமா சென்னும் ஆவேசமாய் சண்டையிடுவார்கள் திடிரென ரீமா அவரை வேறு விதமாக சீண்ட அது ஒரு சிருங்கார விளையாட்டாக மாறும் அவ்விடத்தில் பிரகாஷின் இசை அருமை மாமாவின் பெயரைக் காப்பாற்றி விடுவார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு மிக முக்கியமானதொன்று. அமெச்சூர் தனமான சில கிராபிக் காட்சிகளின் குறையை மறைப்பதிலும் சோழப் பேரரசு தொடர்பான காட்சிகளிலும் ஒளிப்பதிவு அருமை. செல்வாவுக்கு தன மேல் நம்பிக்கையும் தன படைப்புக்களில் காதலும் அதிகம் என நினைக்கிறேன். அதனால்தானோ என்னவோ எடிட்டருக்கு வேலையே வைக்கவில்லை. சில இடங்களில் கத்தரி வைத்திருந்தாள் கச்சிதமாய் இருந்திருக்கும். தான் ஒரு நல்ல இயக்குனரா என்று தனக்குத் தெரியவில்லை எனினும் தான் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர் எனவும் செல்வா ஒரு முறை பேட்டியளித்திருந்தார். ஆனால் இங்கே திரைக்கதை அத்தனை நேர்த்தியாய் இல்லை. சில வேளை இவர் நினைத்ததைப் படமாக்க சிரமமாய் இருந்திருக்கலாம். படத்தில் இவர்கள் பட்ட சிரமம் ஒவ்வொருக் காட்சியிலும் தெரிகிறது. தான் ஆத்ம நண்பர்கள் யுவன்,அர்விந்த் கிருஷ்ணா உடனான பிரிவு,சோனியாவுடன் விவாகரத்து இத்தனைக்கிடையிலும் இந்தப் படத்தோடு அவர் நடாத்தியிருக்கும் போராட்டம் ம்ம் கலையைக் காதலிப்பவனால் மட்டுமே அது முடியும். ஆக சில குறைகள் இருந்தாலும் தமிழின் புதிய முயற்சி என்ற வகையில் இதற்கு கொடுக்கப்படும் ஆதரவு அவரை மேலும் ஊக்கப்படுத்தும் என நம்புகிறேன். படத்தின் இடைவேளையில் அடடா என ரசிகர்கள் கொஞ்சம் பரவசமான மூடில் இருந்தார்கள். எனினும் கிளைமாக்ஸ் நெருங்கும் போது "எப்பையா முடியும்?" என்ற நிலைமைக்கு கொண்டுப் போயிருக்க வேண்டாமே. படத்தில் எதையோ ஞாபகப்படுத்தும் விதமான சில அரசியல் உள்குத்துக்கள் உண்டு. படம் பார்த்தோருக்குப் புரிந்திருக்கும். அதை இங்கே விளக்கினால் சுவாரசியம் கேட்டு விடுமென்பதால் விட்டு விடுகிறேன். நான் மேலே சொன்ன கதை சுருக்கத்தை வைத்து நீங்கள் ஒரு கதையை ஊகித்திருப்பினும் இடைவேளைக்குப் பின் வரும் ட்விஸ்ட் நான் சற்றும் எதிர்பாராதது. உங்களுக்கும் அப்படியே இருக்கும். சோ தயவு செய்து தியேட்டரில் போய்ப் பார்த்து இந்தப் புதிய முயற்சிக்கு ஆதரவு கொடுங்கள். போகும் போது குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு போதல் நலம். என்னை கேட்டால் 14 வயதுக்கு மேலுள்ளோர் பார்க்கலாம் என்பேன்.

No comments: